சென்னை: சென்னையின் பல இடங்களில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்து உள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயிலின் ஐந்தாவது வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் 100 அடி ஜவஹர்லால் நேரு நெடுஞ்சாலையில், வில்லிவாக்கம் மற்றும் பாடியில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணாநகர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

ஐந்தாவது வழித்தடம் மாதவரத்தை சோழிங்கநல்லூருடன் இணைக்கும். இது திருமங்கலம் பகுதியை 100 அடி சாலையில் ஒரு உயரமான மேம்பாலத்தில் கடந்து செல்கிறது, அங்கு ஒரு நிலையமும் இருக்கும். அதனலால், தற்போது பாடியில் இருந்து செல்லும் வாகனங்கள், திருமங்கலம் மேம்பாலத்தின் கீழ் உள்ள 15வது மெயின் ரோட்டில் திருப்பி விடப்பட்டுள்ளது. 15வது மெயின் ரோட்டில் இருந்து, 13வது மெயின் ரோடுக்கு வாகனங்கள் செல்கின்றன.

அண்ணாநகர் ரவுண்டானா செல்லும் வாகனங்கள் 2வது அவென்யூவில் இடதுபுறமாகவும், கோயம்பேடு செல்லும் வாகனங்கள் 2வது அவென்யூ சந்திப்பையும் கடந்து 13வது பிரதான சாலையில் சாந்தி காலனி 4வது அவென்யூவில் வலதுபுறமாக செல்லும்.

மாற்றுப்பாதைகளுக்கான புதிய போக்குவரத்து சிக்னல்கள் இன்னும் நிறுவப்படவில்லை, ஆனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு 10 முதல் 15 மீட்டர் தூரத்திற்கும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.