சென்னை: என்எல்சி நிறுவனம் வாய்க்கால் தோண்டும் பணிக்காக விவசாய நிலங்களை அழித்து வருவதால், அதுதொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அவசல வழக்கான இன்று பிற்பனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்து உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கத்தாழை, கரிவெட்டி மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது.
ஆனால், அந்த இடங்களை முழுமையாக என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராத நிலையில், அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், விவசாயிகள், தங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கவில்லை என்றும், என்எல்சி கூறியபடி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவில்லை என்று கூறி வருவதுடன், தங்களதுக்கு மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இதனால், என்எல்சியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய் வெட்டும் பணி தாமதமாகி வந்தது. இந்த நிலையில்,தற்போது என்எல்சி நிறுவனம், கால்வாய் வெட்டும் பணிகளை அரசு பாதுகாப்புடன் மேற்கொண்டது. , பரவனாற்றுக்கு என்எல்சி சுரங்க நீரை எடுத்துச் செல்லும் வகையில், ஜூலை 26-ம் தேதி காலை வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கப்பட்டது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் வாய்க்கால் வெட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்தியாதோப்பு, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை பாமகவும் தனது அரசியல் லாபத்துக்காக முற்றுகை போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டி விட்டது.
இதனிடையே, என்எல்சி விரிவாக்க பணித் தொடர்பாக விவசாயிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து இன்று மதியம் விசாரிக்கிறது.
என்எல்சியால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர், “கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்எல்சி பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்எல்சி தொல்லை தரக்கூடாது” என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி பாமக வழக்கறிஞர் பாலு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் என்எல்சி வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்கிறது.