பீகார் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் பாரதிய ஜனதா கட்சி, ஆதரவுடன் நிதீஷ்குமார் முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுள்ளார்.

பீகாரில் அமைச்சரவையை விஸ்தரிக்க முடிவு செய்துள்ள நிதீஷ்குமார், இதனை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளில் இருந்து, ஐக்கிய ஜனதா தளத்துக்கு எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ஜாமாகானும், சுயேச்சை எம்.எல்.ஏ. சுமித் சிங் என்பவரும் ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமாகி விட்டனர்.

இருவருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுவது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்கள் நேற்று நிதீஷ்குமாரை பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

ஐந்து எம்.எல்.ஏ.க்களும் சீமாஞ்சல் பகுதியில் இருந்து கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

தங்கள் தொகுதி பிரச்சினை குறித்து விவாதிக்க முதல்வர் நிதீஷ்குமாரை சந்தித்து பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தில் அவர்கள் சேரலாம் என பாட்னாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதீஷ்குமாரை சந்திக்க, இந்த எம்.எல்.ஏ.க்களை, பீகார் மாநில ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அக்தர் –உல்- இமான் அழைத்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி