பாட்னா:

தலாய்லாமாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின் கோரிக்கைக்கு, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.


திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தலாய்லாமா இந்தியாவின் தேவை என்ற தலைப்பில் கோபால கிருஷ்ண காந்தி எழுதியுள்ள கட்டுரையில் தலாய்லாமாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தை நான் ஆதரிக்கின்றேன். தலாய்லாமா விசயத்தில் மத்தியில் ஆண்ட எல்லா அரசுகளும் கண்டும் காணாததை போல் இருந்துவிட்டன.

திபெத் வளர்ச்சியடைவதை நாம் நிச்சயம் விரும்புவோம். சீனாவுடன் திபெத் இருப்பதை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை.
சீனாவிலிருந்து திபெத் வெளியேறுவதை தலாய்லாமாவே விரும்ப மாட்டார்.

திபெத்தில் ஆன்மீகம், கலாச்சாரம், புத்த மதத்தை பாதுகாப்பதே அவரது பணியாக இருக்கிறது.
பிறகு நமது அரசுகள் தலாய்லாமாவுக்கு பாரத் ரத்னா விருதுகள் தர ஏன் தயங்குகின்றன?

கான் அப்துல் கபார் கான், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா ஆகியோருக்கு நாம் மகிழ்வுடன் பாரத் ரத்னா விருதை கொடுத்தோம்.

தலாய்லாமாவுக்கு பாரத் ரத்னா விருது தராதது அவருக்கு இழப்பு அல்ல. நமக்குத்தான் இழப்பு என்று கோபால கிருஷ்ண காந்தி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது உண்மையே.

தலாய்லாமாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நானும் வரவேற்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோபால கிருஷ்ண காந்தி மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். இவர் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றியிருக்கிறார்.

அவரது கட்டுரையின் நிறைவில், “எங்கு சென்றாலும் தலாய்லாமாவுக்குள் உலகம் புத்தரை காண்கிறது. ஆனால் நம்மால் மட்டுமே அவருக்குள் புத்தரை காண முடியவில்லை” என்று முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.