பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் கட்சிக்கும், கூட்டணி கட்சிகளான ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையே சலசலப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பீகால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இண்டி கூட்டணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.

பல ஆண்டுகாலமாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வந்த நிதிஷ்குமார், சமீபத்தில் அதில் இருந்து விலகி, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாபந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். கூட்டணி கட்சியான லாலுவின் ஆர்.ஜே.டி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது, கூட்டணிக்குள் மோதல் எழுந்துள்ளதால், அங்கிருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நிதிஷ்குமார் ஏற்கனவே இண்டி கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க மாட்டோம் என்று கூறியதுடன், அனைவரும் இந்தி படிக்கவேண்டும் என திமுகவின் நடவடிக்கை கடுமையாக எதிர்த்த நிலையில்,  அவர் எதிர்க்கட்சிகளின் இண்டி  கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பீகார் மாநிலத்தின்  ‘மகாத்பந்தன்’  கூட்டணியில் இருந்தும்  வெளியேறுவார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  ஆர்ஜேடி, காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள  நிதீஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையலாம் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன.

பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக நிதிஷ்குமார்   பதவியேற்பு விழா நடக்கும் எனத்  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில், பீகார் மாநில துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்பார் என ஜேடியு வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்த பதவியேற்பு விழா நாளை (28ந்தேதி)  ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக ஜேடி(யு) வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜேடியு மற்றும் ஆர்ஜேடி இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் (ஜனவரி 25ந்தேதி) இரு தரப்பும் செய்தியாளர்களை சந்தித்து தங்களது மனக்குமுறல்களை கொட்டியது. RJD மற்றும் JD(U) வியாழன் அன்று தனித்தனியான சந்திப்புகளை நடத்தியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற (ஜனவரி 26) குடியரசு தலைவர் விருந்திலும் ஆர்ஜேடி கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய நிதிஷ்குமார், இதை அவர்களிடம் போய் கேளுங்கள் என்று காட்டமாக தெரிவித்தார்.

243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ஆர்ஜேடிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர்; தொடர்ந்து பாஜகவின் 78; JD(U) வின் 45’ காங்கிரஸுக்கு 19, CPI (M-L) 12, CPI(M) மற்றும் CPI தலா இரண்டு, இந்துஸ்தானி அவம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) நான்கு இடங்கள் மற்றும் AIMIM இன் ஒரு பிளஸ் ஒன் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் உள்ளனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில்,   பீகார் மாநில பாஜக  தலைவர் சாம்ராட் சவுத்ரி, பாஜக உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடுவ தற்காக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் பாஜக முன்னாள் துணை முதல்வர் ரேணு தேவி உள்ப முக்கிய நிர்வாகிகள் சென்றிருந்தனர். இவர்கள் டெல்லியில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் சுஷில் மோடி , காவி கட்சி ஒருபோதும் நிதிஷுக்கான கதவுகளை “முழுமையாக மூடவில்லை” என்றும்,  “குமார் அல்லது ஜே.டி.(யு)வைப் பொறுத்த வரையில், அரசியலில் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை. நேரம் வரும்போது மூடிய கதவுகள் திறக்கப்படும், ஆனால் அவை திறக்கப்படுமா இல்லையா என்பதை எங்கள் மத்திய தலைமை முடிவு செய்ய வேண்டும், ”என்று தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் நிதிஷ்குமார் திடீரென மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பீகார் பாஜக தலைவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்புவதால் லோக்சபா தேர்தலில் பீகாரில் அதிக இடங்களைக் கைப்பற்ற முடியும் என கணக்கு போட்டுள்ள பாஜக, நிதிஷ்குமார் குறித்து எந்த விமர்சனமும் செய்யாமல் அமைதி காத்து வருகிறது. மேலும்,  நிதிஷ்குமார்  மகாபந்தன் கூட்டணியில் இருந்த விலகும் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும், பின்னர் பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுடன் இணைந்து வரும் 28-ந் தேதி  (நாளை) புதிய கூட்டணி ஆட்சியை அமைக்க  நிதிஷ்குமார் தயாராக இருப்பதாகவும், அன்றைய தினம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட அத்தனை நிகழ்ச்சிகளையும் நிதிஷ்குமார் ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமாரின் கட்சியான JD(U) அவர்கள் எதிர்கட்சியான இந்திய அணியுடன் “உறுதியாக” இருப்பதாகக் கூறினர், ஆனால் கூட்டணிக் கூட்டாளிகள் மற்றும் இடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக காங்கிரஸ் “உள்பரிசோதனை” செய்ய வேண்டும் என்று விரும்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா கத்பந்தன் சலாமத் ஹை (கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது)” என்று ஜேடி(யு) தலைவர் கே.சி.தியாகி முன்பு கூறினார். குமார் குறித்த லாலு யாதவின் மகளின் பதிவுக்கு பதிலளித்த தியாகி, “குழந்தைகளின் கருத்துகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை” என்றார்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த போது பாஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். 2022-ம் ஆண்டு பாஜகவை தூக்கி எறிந்துவிட்டு லாலுவின் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் புதிய ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். தற்போது ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்து 4 ஆண்டுகளில் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இந்த முறை நிதிஷ்குமாருடன்,  பாஜகவி சுஷில்குமார் மோடி துணை முதல்வராகவும் பதவியேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நிதிண்குமாரின் ஜேடியூவை உடைத்துவிட்டால் லாலுவின் மகனும் தற்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அது வெற்றி பெற்றால், , பீகார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்க  வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் அரசியல் களம் இண்டி கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இண்டி கூட்டணிக்கு எதிராக நிதிஷ்குமாரை தொடர்ந்து, மம்தா, கெஜ்ரிவால் போன்றோர்  கொடிபிடித்துள்ள நிலையில், தற்போதைய பீகார் சம்பவம் மேலும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.

கலகலக்கும் இந்தியா கூட்டணி: காங்கிரசுக்கு எதிரான மன நிலையில் நிதிஷ்குமார்…