சேலம்:

சென்னை உயர்நீதி மன்றம் சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துள்ள நிலையில், சேலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்சி, 8 வழிச்சாலை மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என முதல்வர் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ் முன்னிலையிலேயே கூறினார்.

சேலம் தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி, நிதின்கட்கரி, ராமதாஸ்

8வழிச்சாலை திட்டம் எதிர்த்து வழக்கு தொர்ந்தவர்களில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசும் ஒருவர். இப்படி இருக்கும்போது, ராமதாஸ் முன்னிலையிலேயே நிதின் கட்கரி பேசியிருப்பது கூட்டணி கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில், நிதின்கட்கரியின் பேச்சு பல மாவட்டங்களில் விவசாயிகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் அதிமுக கூட்டணி சார்பில்நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் நேற்று, சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், செங்கம் டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வரும் தேர்தலில் பாஜ- அதிமுக கூட்டணியை புறக்கணிப்பது என தீர்மானித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி கிராம விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை பறைசாற்றி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது. அதே  மேடையில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பாமக நிறுவனர் ராமதாசும் அமைதியாக இருந்தனர். இதன் மூலம் எட்டு வழி சாலை திட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததாகவே கருதுகிறோம். எனவே அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்  விவசாயிகள் கொந்தளித்துபோய் உள்ளனர்.