இந்தியாவில் நுகர்வோர் செலவு குறியீட்டில் அடிப்படையில் 5% மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான ‘குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு-2022-23’ அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் தரவுகள் அடிப்படையில் நிதி ஆயோக் இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

உணவுக்காக (பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்) மீதான செலவினங்கள் மொத்த செலவினத்தில் 5%க்கும் குறைவாக உள்ளது தவிர போக்குவரத்து, நுகர்வோர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் சேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது. இது மக்கள் அதிகமாக சம்பாதிப்பதையே உணர்த்துகிறது என்று சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

2011-12ம் ஆண்டில் இருந்ததை விட நுகவோர் செலவினம் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது இதில் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் செலவினங்கள் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் 11% மக்கள் இருப்பதாகவும் மூன்றாவது முறை மோடி பதவியேற்றபின் அது முற்றிலும் குறைக்கப்படும் என்று கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5% என்று கூறியுள்ளது.

இந்த டபுள் எஞ்சின் சர்க்கார் இதே வேகத்தில் போனால் இன்னும் தேர்தல் நெருங்குவதற்குள் வறுமைக் கோட்டுக் கீழ் எந்த ஒரு இந்தியரும் இல்லை என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று விமர்சிக்கின்றனர்.

மேலும், தலைநகர் டெல்லிக்கு அருகே உ.பி. மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசுப் பணிக்கான தேர்வு எழுத பல லட்சக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததில் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. தவிர, டெல்லியின் எல்லையில் விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கான நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச ரேஷன் பொருட்களை நம்பி இருக்கும் நிலையில் உள்ளனர். நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் 5% மக்கள் மட்டுமே வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதாக நிதி ஆயோக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.