சென்னை:

பாரதிய ஜனதாவிற்கு தமிழ்நாடுதான் பிரச்சினையாக இருக்கிறது என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருவதாக பாஜக சொல்லி வருகிறது.

ஆனால், இது போன்ற திட்டங்களால் அடித்தட்டு மக்கள் எவ்வித பலனையும் அடையவில்லை என்று காங்கிரஸ், இடதுசாரி உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது மூன்றாண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் விதமாக நாடெங்கிலும் பாஜக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை அமைந்தகரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய நிதின் கட்கரி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது.

நமக்கு டில்லியோ அல்லது வேறு மாநிலமோ பிரச்சினையாக இல்லை.

ஆனால் தமிழ்நாடுதான் தான் பிரச்சினையாக உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, இங்கே உள்ள அரசியல் வெற்றிடத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாஜக எம்பிகள் அதிகளவில் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில்தானஅ மிகமிக குறைந்த அளவில் ஒரே ஒரு எம்பி இருக்கிறார்” என்று நிதின் கட்காரி பேசினார்.