டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை காலை 6 மணிக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரையும் வெவ்வேறு நாளில் தூக்கிலிட முடியாது என்ற நீதிமன்றம், 2வது முறையாக தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது.

முன்னதாக பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட தடை கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வினய் மற்றும் அக்ஷய் குமாரின் மறுசீராய்வு மனுக்களை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது பவன் குப்தாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நடந்தபோது, மைனர் என்று குறிப்பிட்ட பவன் குப்தா, தம்மை  தூக்கில் போட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டார். அதை ஏற்காத உச்ச நீதிமன்றம், பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது.