டில்லி

நிரவ் மோடியின் குடும்ப நிதி நிறுவனம் ரூ.540 கோடி வங்கி நிதியை சுருட்டி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.6498 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக சிபிஅம் வழக்கு பதிந்துள்ளது.     இதில் நிரவ் மோடி நடத்தி வரும் மூன்று நிறுவனங்களான “டைமண்ட் ஆர் யு எஸ்,” சோலார் எக்ஸ்போர்ட், மற்றும் ஸ்டெல்லர் டைமன்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த வங்கி நிதியை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.    இவைகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என நிரவ் மோடி தெரிவித்துள்ளார்.

ஆனால் செய்தித் தொலைக்காட்சியான என் டி டி வி சமீபத்தில் நடத்திய புலனாய்வில்  மேற்குறிப்பிட்டுள்ள டைமண்ட் ஆர் யு எஸ் நிறுவனத்தில் இருந்து ரூ. 539 கோடி வரை வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   அந்த நிறுவனத்தின் பெயர் என் டி எம் ஃபேமிலி டிரஸ்ட் ஆகும்.   இதன் விரிவாக்கம் நிரவ் தீபக் மோடி ஃபேமிலி டிரஸ்ட் ஆகும்.   அதாவது இது நிரவ் மோடியின் குடும்ப நிதி நிறுவனம் ஆகும்.

நிரவ் மோடி குடும்ப நிதி நிறுவனம் மற்றும் டைமண்ட் ஆர் யு எஸ் ஆகிய இரு நிறுவனங்களுமே தனிப்பட்ட உரிமையாளர் நடத்தி வரும் நிறுவனம் என்பதால் வெளி ஆட்களுக்கு தங்கள் நிதி நிலை குறித்து விளக்கம் அளிக்க தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.    டைமண்ட் ஆர் யு எஸ் என்னும் நிறுவனத்துக்கு மூன்று பங்குதாரர்கள் உள்ளனர்.   அவர்கள் ஏ என் எம் எண்டர்பிரைசஸ்,  என் டி எம் ஃபேமிலி டிரஸ்ட் மற்றும் நிரவ் தீபக் மோடி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட் ஆகும்.

அதாவது அனைத்து நிறுவனங்களுக்கும் நிரவ் மோடியே உரிமையாளர் ஆவார்.   இவ்வாறு அவர் ஒரு நிறுவனத்தில் கடன் வாங்கி மற்ற நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தை மாற்றி வங்கி நிதியை சுருட்டி உள்ளதை என் டி டி வி நிறுவனம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.   அத்துடன் இந்த ஊடகத்தின் பிரதிநிதிகள் அந்த டைமண்ட் ஆர் யு எஸ் முகவரியாக  குறிப்பிட்டுள்ள மும்பை அலுவலகத்துக்கு சென்றுள்ள போது அங்கிருந்த காவலாளி அந்த இடத்தில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என தெரிவித்துள்ளார்.