சிம்லா:

கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ், தமிழகத்தில் பரவி உள்ளதாக பீதி கிளம்பிய நிலையில், தற்போது இமாச்சல பிரதேசத்திலும் நிபா வைரஸ் தாக்குதல் இருப்பதாக பீதி கிளம்பி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு செவிலியர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ள நிலையில், நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிபா வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதாகவும், வவ்வால்கள்  வௌவால்கள் ருசித்த பழங்களில் இருந்து இந்த நோய்த் தொற்று பரவி   உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலம்  சிர்மவுர் மாவட்டத்திலுள்ள பர்மா பப்டி என்ற அரசுப் பள்ளி வளாகத்தில் 18 வவ்வால்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதைகண்ட பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், உயிரிழந்த வவ்வால்களை கைப்பற்றிய அதிகாரிகள், அதை  புனே மற்றும் ஜலந்தரில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரஸ் ஆராயச்ச் மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு வவ்வால்கள் இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நிபா வைரஸ் இமாச்சலிலும் பரவி வருவதாக ஒருசிலர்  பரப்பிய வதந்திகள், தற்போது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்புக்களையும், முன்னெச்சரிக்கைகளையும்  பின்பற்றுமாறும் பொது மக்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.