நாகர்கோவில்: தமிழ்நாட்டில் நிபா மற்றும் குரங்கு அம்மை தாக்கம் இல்லை என சுகாதாரதுறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்து உள்ளார்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் அண்டைய மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, மாநில எல்லை பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் ஆய்வு செய்ா தமிழ்நாடு சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
“தமிழ்நாட்டில் நிபா மற்றும் குரங்கு அம்மை தாக்கம் இல்லை. பரவாமல் இருக்க மாவட்ட எல்லையோரம், விமான நிலையம், களபணியாளர் என ஐந்து வழிகளில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தொற்றுக்கள் பரவ கூடுதல் வாய்ப்பு உள்ளன. இதனால், தீவிரமாக பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். பரிசோதனை மேற்கொள்ளும் போது மக்கள் ஒத்துழைப்பு கொடுங்கள்.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்கள் உடனே அணுகுங்கள். தேவை இல்லமால் பயணத்தை தவிருங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.