சென்னை: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் மக்கள் தொகையில், 100% ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நமது மாநிலத்தில், இதுவரை 66 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். மொத்தமுள்ள 6 கோடி பேரில், 4 கோடியே 3 லட்சம் பேர் போட்டுள்ளார்கள்.
தமிழகத்திலேயே தடுப்பூசி அதிக அளவில் செலுத்தப்பட்டு வந்த மாநிலமாக நீலகிரி மாவட்டம் இருந்து வந்தது. நேற்று அங்கு 295 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மை மாவட்டமாக நீலகிரி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களும் தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை வினியோகித்து வருகின்றனர். இந்த பணியில் 1,632 பேர் ஈடுபட்டு செயலாற்றி வந்தனர்.
அதன்படி, இதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்திருந்தார். இந்த முகாம்களில் ஒரு கிராம சுகாதார செவிலியர் அல்லது செவிலியர், ஒரு தரவு பதிவாளர், 2 அங்கன்வாடி பணியாளர்கள் (பொதுமக்களை அழைத்து வர) என மொத்தம் 4 பேர் பணியில் ஈடுபடுவார்கள். மொத்தம் 295 முகாம்களுக்கு 1,180 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். முதல் டோஸ், 2வது டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்றைய முகாமில் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10,234 பேருக்கு முதல் டோசும், 19,526 பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது. நேற்றைய சிறப்பு முகாமில் மட்டும் மொத்தம் 29,760 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவிகிதம் ஒருடோஸ் கொரோனா தடுப்பூசி பெற்ற மாவட்டம் என்ற அந்தஸ்தை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது. இதற்காக அம்மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.