சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட 30 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில்,  3 நாட்கள் நிலா திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் பிப் 28ம் தேதி  தேசிய அறிவியல் தினம், கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மத்தியஅரசு அறிவியல்பூர்வமான பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு வரும் 28ந்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை பெசன்ட் நகர், மெரினா கடற்கரை உள்பட 30  இடங்களில் நிலா திருவிழா 3 நாட்கள் நடைபெறும் என தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி  அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்ச்சி கோவையில் 40 இடங்கள், சென்னையில் 30 இடங்கள், திருச்சியில் 25 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நடத்தப்பட உள்ளன.

வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தொலை நோக்குடன் பல்வேறு இடங்களுக்கு சென்று இன்று (25ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும் அன்றைய நாளில் தெரியக்கூடிய நட்சத்திர கூட்டங்களையும் காண்பிக்க உள்ளனர்.

இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு 6 கட்டங்களாக பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கியை கொண்ட வைணுபாப்பு அப்சர்வேட்டரி சார்பிலும் இந்த 4 நாட்களும் நிலா திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 30 இடங்களில் நிலா திருவிழா நடைபெறுகிறது. இன்று (25ந்தேதி)  பெசன்ட் நகர் கடற்கரை வடக்கு பகுதியிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெரினா கடற்கரை பாரதியார் சிலை அருகிலும் திங்கட்கிழமை கிண்டி தேவதாஸ் அப்சர்வேட்டரியிலும், செவ்வாய்க்கிழமை கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட 30 இடங்களில் நடைபெறுகிறது என்றார்.