டெல்லி: கொரோனா மற்றும் ஒமிக்ரான்(Omicron) பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பயன்படாது, எல்லைகள் தொற்று பரவலை தடுக்காது என தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் (என்.ஐ.இ) துணை இயக்குநருமான டாக்டர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமிக்ரான பரவல் அதிகரித்துள்ளதால், டெல்லி உள்பட 8 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 11மணி முதல் அதிகாலை 5மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வும், தேவைப்பட்டால் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய உள்துறை, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநருமான டாக்டர் பிரப்தீப் கவுர்,இரவு நேர ஊரடங்கால் பயன் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், #Covid19 #Omicron க்கு எதிராக இரவு ஊரடங்குச் சட்டம் செயல்படாது; நல்ல தரமான மூன்று அடுக்கு துணி முகமூடி அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் சர்ஜிக்கல் மாஸ்கை அணியுங்கள். கூட்டம் கூடுவதை தவிருங்கள்.  இரண்டாவது டோஸ் #CovidVaccine எடுக்காதவர்கள் உடனே அதை எடுங்கள்.  தகுதியுள்ளவர்கள், ஜனவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு பூஸ்டரைப் பெறுங்கள். பூஸ்டருக்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதை அறிய உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு டிவிட்டில், எல்லைகளால் (பார்டர்களை மூடுவதால்)  வைரஸ்களை நிறுத்த முடியாது என்பதை  நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்! ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுவான பொது சுகாதார அமைப்புகளையும், உயர்தர ஆய்வகங்களையும் உருவாக்க வேண்டும், நல்ல தரமான தரவுகளை உருவாக்க வேண்டும் மற்றும் இந்த தொற்றுநோயையும் அடுத்த தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கை மற்றும் வலுவான பொது சுகாதார பணியாளர்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.