லக்னோ: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். திருமணம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் புதிய பிறழ்வு தொற்றான ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகை 358 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தொற்று பாதிப்பு டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகமாகி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து  ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உ.பி.யில் நாளை (25ந்தேதி)  முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக  உ.பி அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதனப்டி, ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் உத்திரப்பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும், தேவையான அனைத்து கோவிட்-பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அனைத்து கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் “முகமூடி இல்லை, பொருட்கள் இல்லை” கொள்கையை பின்பற்றுமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து உ.பி.க்கு வருபவர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், குறிப்பாக ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.