கோவை:

லங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, கோவையில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஈஸ்டர் பண்டிகை நாளன்று கோவையில் உள்ள தேவாலயம் உள்பட பல இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 350 பேர் பலியானது  உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், அதில் தொடர்புடைய பலர் தமிழகத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும், இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம்   நடைபெற்ற விசாரணையில், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், தமிழகத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது.

அதையடுத்து கடந்த மே மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸியினர் சோதனை நடத்தினர்.  அப்போத, சந்தேகிக்கப்படும் இடங்களில் 3 லேப்டாப்கள், 3 ஹார்டு டிஸ்க்குகள், 2 பென் டிரைவ்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக, தேசிய புலனாய்வு ஏஜென்ஸி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.  உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவர்களின் வலைதள பக்கங்களில், இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகளை சம்பந்தப்படுத்துவது போல விவரங்கள் இருந்ததாகவும், இதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து,  இந்தியாவில், தீவிரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.