விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று, சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை பிடித்து, சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அதில், அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்ததும், செட்டிச்சாவடி பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், துப்பாக்கி தயாரித்ததில் தொடர்புடையதாக, அவர்களின் நண்பரான அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்து, அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக யுடியூபர் சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஒரு மடிக்கணினி, 7 மொபைல்கள், 8 சிம்/மெமரி கார்டுகள் மற்றும் 4 பென் டிரைவ்கள், எல்.டி.டி.இ. பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவர் பிரபாகரன் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.