தேசிய மனித உரிமை அமைப்பில் (NHRC) உறுபினராக பாஜக துணைத்தலைவர் அவினாஷ் ராய் கண்ணா நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. இக்குழுவில் அரசியல்வாதி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

avinash

அவினாஷ் ராய் கண்ணா தற்பொழுது மாநிலங்களவை பாஜக உறுப்பினராக உள்ளார். காலியாக இருந்த இப்பதவிக்கு ஏற்ற உறுப்பினரை தேர்வு செய்வது குறித்து கடந்த மாதம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் வேறு சிலரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டாலும், அவினாஷ் ராய் கண்ணாவின் பெயரே இறுதியில் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இது எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.
தேசிய மனித உரிமை அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார். உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைவராக பிரதமர் இருப்பார், மேலும் மத்திய உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர், இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். நான்கு உறுப்பினர்களை, பிரதமர் தலைமையில் உள்ள இக்குழு தேர்வு செய்யும்
அரசியல் கட்சியில் உள்ள ஒருவரை இப்பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. ஆனால் அப்படி தேர்வு செய்வது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பும். இது ஒருதவறான முன்மாதிரியாகவும் அமையும். அரசியல் சாராத ஒருவரை இந்தக் கமிட்டியால் தேர்வு செய்ய முடியவில்லையா? என்று பெயர் குறிப்பிட விரும்பாத தேசிய மனித உரிமை அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இதே பாஜக எதிர்கட்சியாக இருந்தபோது 2013 ஆம் ஆண்டு இப்பதவிக்கு முன்மொழியப்பட்ட சிரியாக் ஜோசப் என்பவரை, “இவர் சில அரசியல் கட்சிகளுடனும் மதரீதியான அமைப்புகளுடனும் தொடர்புடையவர்” என்று குற்றம் சாட்டி அந்த நியமனத்தை எதிர்த்தது. இப்பதவிக்கு அரசியல் சார்பற்ற ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும் என்று பாஜக அப்போது குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.