புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்துவிட்டதையடுத்து, அடுத்த தலைவராக, தலித் தலைவரான முகுல் வாஸ்னிக் நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்ததையடுத்து, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. இதனையடுத்து புதிய தலைவர் யார் என்ற கேள்விகள் பல நாட்களாக விடைகாணப்படாமல் உள்ளன.

இந்நிலையில், அடுத்த தலைவர் பதவிக்கு சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா, முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், பல நாட்களாக முடிவு எட்டப்படாமல் குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சுஷில்குமார் ஆகியோருடன் ஒப்பிடுகையில், முகல் வாஸ்னிக் தலைவராவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வாரம் வாக்கில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூடி, இதுதொடர்பாக விவாதிக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது, காந்தி குடும்பம் சாராத ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு காரியக் கமிட்டி உறுப்பினரும் தங்கள் சார்பாக 4 பெயர்களை தலைவர் பதவிக்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளம் தலைவரான மத்தியப் பிரதேசத்தின் ஜோதிராதித்யா சிந்தியா, தலைவர் பதவி உட்பட, வேறு எந்தப் பதவிக்கான போட்டியிலும் தான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.