வெலிங்டன்: வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து அணி.
வங்கதேசம், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் & டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து வென்று, தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
அதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அந்த அணியின் டெவான் கான்வே 126 ரன்களை அடித்தார். மற்றொரு வீரரான மிட்செல் சரியாக 100 ரன்களை அடித்தார். அதேசமயம், மற்ற வீரர்கள் யாரும் அரைசதம்கூட அடிக்கவில்லை. மூன்றாவது அதிகபட்ச ரன்கள் 26 மட்டுமே.
இறுதியில், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 318 ரன்கள் எடுத்தது.
பின்னர், சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் மகமதுல்லா மட்டுமே அதிகபட்சமாக 76 ரன்களை அடித்தார். அதன்பிறகு, 21 ரன்கள் மட்டுமே அந்த அணியின் அதிகபட்ச ரன்கள்.
இறுதியில், 42.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 164 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நியூசிலாந்தின் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதன்மூலம், நியூசிலாந்து அணி, வங்கதேசத்தை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.