வெலிங்டன்: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 1 இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ஈட்டியது நியூசிலாந்து அணி.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட்டுகளை இழந்து 519 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்தார்.

பின்னர், களமிறங்கிய விண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், பாலோ ஆன் பெற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய அந்த அணி, அப்போதும் சோபிக்கவில்லை.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்திருந்தது. பின்னர், தனது நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய நிலையில், முதல் செஷனிலேயே எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் 247 ரன்களுக்கு இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

பிளாக்வுட் அசராமல் ஆடி சதமடித்தார். 141 பந்துகளில் அவர் 104 ரன்களை அடித்தார். அவருக்கு துணையாக நின்ற ஜோசப் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் வேக்னர் 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.