சென்னை: விமானங்கள் சிக்கலின்றி இலகுவாக தரையிறங்குவதை சாத்தியப்படுத்தும் வகையில், சென்னை விமான நிலையத்தில், செயற்கைக்கோள் அடிப்படையில் இயங்கும் GPS-based Ground Based Augmentation System(GBAS) -ஐ செயல்பாட்டிற்கு கொண்டுவரும் வேலைகளில் இந்திய விமான நிலையங்களின் ஆணையம்(AAI) ஈடுபட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டே இந்த அமைப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்றாலும், அந்தாண்டு சென்னை அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட சர்வர்கள் சேதமடைந்தன. எனவே, அப்பணிகள் அப்போது தடைபட்டன.
ஆனால், தற்போது அப்பணிகளை மீண்டும் தொடங்க, AAI திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலமாக, விமானங்கள் தரையிறங்கும் ஓடுபாதையை கண்டறிவதிலும் வழிகாட்டுவதிலும் உள்ள சிக்கல்களை களைய முடியும்.
சுற்றுச்சுவர் ஓரத்தில், அடையாறு ஆற்றின் அருகாமையில் அமைக்கப்பட்டதால் வெள்ளத்தில் சேதமடைந்த சர்வர்கள், தற்போது நிலையத்தின் உள்புறமாக பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் இன்னும் சில சிக்கல்களை களைய வேண்டியுள்ளது. அதன்பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.