சென்னை: சென்னை மாநகராட்சி நீங்கலாக மற்ற 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விடுதலின்றி பட்டியலிட்டு பராமரிக்க மின் ஆளுமையின்கீழ் புதிய இணையவழி தளத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
‘நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (26-06-2021) நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பட்டியலிட்டு பராமரிக்க மின் ஆளுமையின் கீழ் புதிய இணையவழி தளத்தினை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்துஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“நகராட்சிகளின் இயக்குநரகம், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று (26.06.2021) ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விடுதலின்றி பட்டியலிட்டு பராமரிக்க மின் ஆளுமையின்கீழ் புதிய இணையவழி தளத்தினை இன்று அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய சேவைகளான பிறப்பு/இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் வழங்குதல், வரிவசூல், குடிநீர்/பாதாள சாக்கடை இணைப்பு, சிறு வணிக உரிமம், கட்டிட வரைபட அனுமதி போன்ற 29 சேவைகள் மின் ஆளுமை மூலம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளிலும் உள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விடுதலின்றி பட்டியலிட்டு பராமரிக்க மின் ஆளுமையின்கீழ் புதிய இணையவழி தளம் தயார் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருச்சி மாநகராட்சியின் சொத்துக்களை பதிவேற்றம் செய்யும் இணையவழி மென்பொருள் சேவையினை அமைச்சர் கே.என்.நேரு இன்று (26.06.2021) தொடங்கி வைத்தார். ஒரு மாத காலத்திற்குள் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இச்சேவை ஏற்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்படுவதோடு விரைவில் பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 121 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்(TNSUDP), திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், தெருவிளக்கு பணிகள், பாலப் பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக உயர் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்களுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்தவும், துவங்க வேண்டிய பணிகளை விரைவில் துவங்கவும் அலுவலர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார். முன்னதாக ஆவடி மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த செயல்படுத்தப்படவுள்ள தற்காலிக தடுப்பூசி முகாம்களின் மாதிரி வடிவத்தை பார்வையிட்டு தடுப்பூசி செலுத்தப்படுவதை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சாய்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.ஸ்வர்ணா.
புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு திட்ட மேலாண்மை இயக்குநர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே, நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தக்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் கே. மெகராஜ், நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், நகராட்சிகளின் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.