புதுடெல்லி: ரூ.25 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க வேண்டுமென கூறியுள்ளார் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30% அளவிற்கு குறைக்கும் முடிவை வரவேற்பதாக அவர் கருத்து தெரிவித்த நிலையில்தான், இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள், மத்திய அரசின் முடிவான சம்பளப் பிடித்த நடவடிக்கைக்கு தாமாக முன்வந்து 30% சம்பளத்தைக் குறைக்க ஒப்புதல் அளித்தனர். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் சம்பளமும் குறைக்கப்படுகிறது.
தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்படுவதால் கிடைக்கும் ரூ.7,900 கோடி கொரோனா பரவல் தடுப்பு நிதியில் சேர்க்கப்படுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளையில், ரூ.25,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டும் செயல்பாட்டையும் ஓராண்டிற்கு ஒத்திவைக்க வேண்டுமென கூறியுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.