டெல்லி:

ந்தியாவில் பயணிகள் சேவையாற்றி வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், கொரோனா பரவல் காரணமாக சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விமானங்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு விமானங்களாக செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் இருக்கைகளில் ஸ்பைஸ்ஜெட் விமானம் முதன்முறையாக  கொரோனா தடுப்புக்கு உரிய முக்கிய பொருட்களை ஏற்றிச்சென்றது.

டெல்லியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் அமரும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மீது, முக்கிய பொருட்களை ஏற்றியுள்ளது.  இதன்மூலம்  நாட்டின் முதல் சரக்கு-ஆன்-சீட் விமானத்தை ஸ்பைஸ்ஜெட் இயக்கியதாக தெரிவித்து உள்ளது.

சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உரிய ஒப்புதல்களைப் பெற்ற பின்னரே அந்த விமானம் இயக்கப்பட்டதாகவும், மிக முக்கியமான இந்த நேரத்தில் மிக முக்கியமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் 5 முறை இயக்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

அதுபோல இண்டிகோ விமான நிறுவனமும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும்,  உணவு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச்செல்ல தனது சொந்த செலவில் 30 க்கும் மேற்பட்ட நிவாரண விமானங்களை இயக்கி வருவதாகவும் தெரிவித்து உள்ளது.