புதிய தொடர்:
வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்!
நுழைவாயில்…
வரலாற்று ஆய்வாளனாகவும் பத்திரிகையாளனாகவும் பல நேரங்களின் வரலாற்றை அதன் அடிவேரிலிருந்து ஆராய வேண்டிய சூழல்கள் எனக்கு ஏற்பட்டு உள்ளன. அப்படி மேற்கொண்ட பல ஆய்வுகளின் முடிவுகள் என் உறக்கத்தைக் கலைப்பவையாகவும், எனது முந்தைய பிம்பங்கள் மீது கல் வீசி உடைப்பனவாகவும் இருந்துள்ளன. அத்தகைய தருணங்களில்
‘பழமை பழமையென்று பாவனைகள் பேசல்அன்றி
பழமை இருந்தநிலை – கிளியே
பாமரர் ஏது அறிவார்?’ – என்று பாரதியார் சொன்னதன் பொருளை நான் ஆழமாகவே உணர்ந்து இருக்கிறேன். இப்படியாக அறிய நேர்ந்தவற்றில் எந்த எந்த உண்மைகளை எல்லாம் மக்களும் சமுதாயமும் கட்டாயமாக அறிய வேண்டும் என்று நான் எண்ணினேனோ அத்தகைய 20 வரலாற்றுத் திருத்தங்களின் தொகுப்புதான் இந்த நூல்.
பெண்கள் குறித்தவை, அறிவியல் குறித்தவை, பொதுவான நம்பிக்கைகள் – ஆகிய மூன்று பகுப்புகளுக்குள் இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளையும் அடக்கிவிட முடியும். இந்த நூலை நீங்கள் ஒரு நடையில், ஒரு ஓட்டத்தில், ஒரே பயணத்தில் கடந்துவிட முடியாது. இந்த நூல் உங்கள் பாதையில், பயணத்தில், பார்வையில் கட்டாயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
தோழமையுடன்
இரா.மன்னர் மன்னன்