சென்னை; புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ந்தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின்மீதான வழக்கு வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்பது தெரிய வரும்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை செயல்பட்டு வரும் புதிய தலைமைச் செயலகம், திமுக ஆட்சியில் கட்டியதில் முறைகேடு செய்ததாக, அடுத்து வந்த அதிமுக ஆட்சி குற்றம் சாட்டியது. அதாவது, திமுக ஆட்சிக் காலத்தில் 2008 முதல் 2010 வரை அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டது. இநத் கட்டிட முறைகேடு தொடர்பாக, உயர் நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் (ஓய்வு) தலைமையில் விசாரணை நடத்த ஆணையத்தை தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தில் இருந்து, நீதிபதி (ஓய்வு) தங்கராஜ்,  விலகியதை அடுத்து, நீதிபதி (ஓய்வு) ரகுபதி தலைமையில் 2011ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது. ரகுபதி ஆணையத்தை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆணையம் திரட்டிய தகவல்களை பரிசீலித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை தேவையா என்பதை அரசு முடிவு செய்ய ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், தமிழக அரசு ஆணையத்தின் ஆவணங்களை பரிசீலிக்காமல் நேரடியாக ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்தும், விசாரணை ஆவணங்களை பரிசீலிக்காமல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றியதை எதிர்த்தும், மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தடை விதித்தது.

உயர் நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், புதிய விசாரணை தேவை இல்லை என்பதால் கடந்த ஜூலை 13ஆம் தேதி வழக்கை திரும்பப் பெறுவதாக, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதால் வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கை தொடர்ந்தார் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் மீதான வழக்கு வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்குமா அல்லது விசாரணையை எதிர்கொள்ள அறிவுறுத்துமா என்பது தெரிய வரும்.