சென்னை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ ஜியோ இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து கோர்ட்டு தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில், அரசு அறிவித்தபடி செயல்படவில்லை என்று கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான (ஜாக்டோ – ஜியோ) சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில்  மறியல் போராட்டம் நடந்தது.

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 1000க்கும்  மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர்.

அவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்படஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள  ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அடுத்த வாரம் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.