புதுடெல்லி: நீண்டகால வானிலை முன்னறிவிப்பிற்காக கடந்த 10 ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய இணைந்த முன்னறிவிப்பு மாதிரி(சிஎஃப்எஸ்) எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பது இந்தாண்டு மழையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பெய்த பருவமழை கடந்த 25 ஆண்டுகளில் பெய்ததைவிட அதிகம். ஆனால், இந்தாண்டு மழையளவு அதிகமாக இருக்கும் என்பதை புதிய மாதிரி கணிக்கவில்லை. பழைய அமைப்பைவிட இது சிறப்பாக செயல்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு, குறிப்பாக வடமாநிலங்களில், வழக்கத்தைவிட 10% அதிக மழை பெய்துள்ளது. ஆனால், இந்த அளவு முன்னரே கணிக்கப்படவில்லை. புதிய மாதிரியின் கணிப்பின்படி மழையளவு 96% மற்றும் 99% என்பதுதான். ஆனால் பெய்த மழையின் அளவோ 110%.

குறுகியகால கணிப்பில் அந்த புதிய அமைப்புகள் சரியாக செயல்பட்டாலும், நீண்டகால கணிப்பில் பயன்படவில்‍லை என்று கூறப்படுகிறது. இந்தக் கணிப்பை சம்பந்தப்பட்ட துறையானது, அகில இந்திய அளவிலான கணிப்பில் பயன்படுத்தவில்லை. புதிய அமைப்பானது, ‘மான்சூன் மிஷன்’ என்ற திட்டத்தின் கீழ், ரூ.1200 கோடி செலவில் கடந்த பத்தாண்டுகளாக மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.