புதுடெல்லி: சிபிஐ அமைப்பில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பிரிவில் பணியாற்றும் மற்றும் ஒரே நகரம் அல்லது இடத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் ஒரு விசாரணைக் குழுவில், தனிப்பட்ட நபர்கள் ஆதிக்கம் செய்வதைத் தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

சிபிஐ அமைப்பின் 72 யூனிட்டுகளிலிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிபிஐ வரலாற்றில் இந்தளவிற்கு பெரிய எண்ணிக்கையில் சிபிஐ அதிகாரிகள் இடமாற்றத்திற்கு உள்ளாக இருப்பது இதுவே முதன்முறை என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஊழல், பொருளாதார குற்றங்கள், சைபர் குற்றம், சிறப்பு குற்றங்கள் உள்ளிட்ட பலவற்றை விசாரிக்க சிபிஐ அமைப்பில் மொத்தம் 72 யூனிட்டுகள் உள்ளன.

இடமாற்றம் செய்யப்பட உள்ளவர்களில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் நிலையிலுள்ள அதிகாரிகள் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.