சென்னை

சென்னையில் கேப்ஸ்யூல்களுக்குள் வைத்து தங்கம் கடத்தியோரிடம் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் பேதி மருந்து கொடுத்துத் தங்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

தங்கம் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதைக் கண்டு பிடிக்கும் கஸ்டம்ஸ் அதிகாரிகளை ஏமாற்ற கடத்தல்காரர்கள்  பல புதிய முறைகளைக் கண்டு பிடித்து வருகின்றன.  அப்படியும் விடாமல் இதை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்டறிந்து கடத்தல் தங்கங்களைப் பிடித்து வருகின்றனர்.  தற்போது ஒரு நூதன முறையில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் உறைகளுக்குள் தங்கத்தை மறைத்துக் கடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகின.  இதை அடுத்து கஸ்டம்ஸ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் அடுக்கடுக்காக பல கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளனர்.  இவர்களை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி ஏராளமான உணவுகளை அளித்து வாந்தி எடுக்க வைத்துத் தங்கத்தை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

கடந்த எட்டு நாளில் மட்டும் இவர்களிடம் இருந்து 4.15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.  இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.17 கோடி ஆகும்.

இவ்வகையில் மேலும் 8 பேர் கேப்ஸ்யூல்களில் தங்கத்தை அடைத்து அவற்றை விழுங்கி கடத்தி வந்துள்ளனர்.  இவர்கள் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து 161 கேப்ஸ்யூல்களில் ரூ.1.28 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுப் பேதி மருந்து கொடுத்து தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.  இவர்கள் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.