சென்னை: புழல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் மறுவாழ்வை முன்னிட்டு, அவர்களுக்கான பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. தங்களின் தண்டனை காலத்தில் 6 ஆண்டுகளைக் கழித்த தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வாடி, வெளியுலக வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்ட அவர்களுக்கு, நாள்தோறும் பெட்ரோல் பங்க்கில் பார்க்கும் புதுப்புது மனிதர்கள் மனதிற்கு மிகப்பெரும் ஆறுதலாக இருப்பதோடு, மகிழ்ச்சியை அளிக்கும் அனுபவமாகவும் உள்ளது.
புழல் சிறை எண்-1 ல் பணிபுரியும் 33 வயது ரமேஷ் என்பவர், வெள்ளைநிற சீருடையில் சிரித்த முகத்துடன் வாகன ஓட்டிகளை வரவேற்கிறார். அவர் ஒரு நிலத்தகராறில் நடந்த கொலைக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவருக்கான தற்போதைய புதிய பொறுப்பு என்பது ‘பணி’ என்பதற்கும் மேலான ஒன்று. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான ரமேஷ், “சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வாடிய நாட்களின் துன்பம் மற்றும் மன அழுத்தங்களை மறக்க, இந்தப் பணி பேருதவி புரிவதாக” கூறுகிறார். இது தனக்கு ஒரு புதிய அனுபவமாய் இருப்பதாகவும் கூறுகிறார்.
சிறைத்துறையும் இந்தியன் ஆயில் கார்பரேஷனும் இணைந்து ‘Freedom Fuel Filling Station” என்ற பெயரில், இந்த பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களிலும் இத்தகைய பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பகு குறிப்பிடத்தக்கது.
சிறைக் கைதிகளின் தண்டனைக்குப் பிறகான வாழ்வில், சிறைத்துறையின் இத்தகைய முயற்சிகள் பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.