சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய பொறுப்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, புதிய பொறுப்பாளராக கிரிஷ் சோடன்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தற்போதைய பொறுப்பாளர் அஜோய் குமாருக்கு பதில் புதிய பொறுப்பாளர் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக கடந்த 2023ம் ஆண்டு, அஜோய் குமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். . ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக உள்ள அஜோய் குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராக கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்தநிலையில், அவரை மாற்றி கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கிரிஷ் சோடன்கர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், பஞ்சாப் மாநில பொதுச்செயலாளராக பூகேஷ் பாகலும், ஜம்மு காஷ்மீர் மாநில பொதுச்செயலாளராக சையத் நஷீர் உசைனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன், 9 மாநில பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி,
- இமாச்சால பிரதேசம் மற்றும் சண்டிகர் மாநில பொறுப்பாளராக திருமதி ரஞ்சனி பட்டீல்,
- ஹரியானா மாநில பொறுப்பாளராக பி.கே.ஹிரிபிரசாத்,
- மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக ஹரிஷ் சவுத்ரி,
- தமிழ்நாடு மாநில பொறுப்பாளராக – கிரிஷ் சோடன்கர்
- ஒடிசா மாநில பொறுப்பாளராக – அஜய் குமார் லல்லு
- ஜார்கண்ட் மாநில பொறுப்பாளராக – கே.ராஜு,
- தெலங்கானா மாநில பொறுப்பாளராக – மீனாட்சி நடராஜன்,
- மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் மற்றும் நாகலாந்து மாநிலங்களின் பொறுப்பாளராக – சப்தகிரி சங்கர் உல்கா,
- பீகார் மாநில பொறுப்பாளராக கிருஷ்ணா அல்லவாரு
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.