டில்லி

நீரிழிவால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றால் புதிய பூஞ்சை தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.

சமீபகாலமாக கொரோனா தொற்று நாட்டில் மிகவும் அதிகரித்து வருகிறது.   இந்தியாவில் நேற்று வரை 2.26 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 2.46 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை சுமார் 1.86 கோடிக்கும் அதிகமானோர் குணம் அடைந்து தற்போது 31.74 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் குறிப்பாக நீரிழிவு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், “நீண்ட காலமாக நீரிழிவு நோய் உள்ளவரக்ள் மற்றும் தீவிர சிகிச்சையில் உள்ளோருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.  மேலும் இவர்களின் உடலில் மியுகோமிகோலிஸ் என்னும் ஒரு வகை பூஞ்சை தொற்று உருவாகிறது.

இந்த  பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானதாகும்.  இவை மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனை வெகுவாக குறைத்து விடுகிறது.  இது ஆய்வு பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.    இந்த பூஞ்சை காற்றில் பறந்து உடல் நலம் பாதித்தவர் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வகை பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இவர்களுக்கு கண்கள் மற்றும் மூக்கை சுற்றிச் சிவப்பு நிறம் காணப்படும்.  மேலும் கண் அல்லது மூக்கை சுற்றி வலி, தலைவலி, இருமல், மூச்சுத்திணறல் ரத்த வாந்தி உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதற்குத் தடுப்பு எப்போதும் முகக் கவசம் அணிவது ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.