தயாநிதி மாறன் – ரஜினி – கார்த்திக் சுப்புராஜ்

தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினி அறிவித்திருக்கும் நிலையில், புதிய பட அறிவிப்பு வந்திருக்கிறது. கலாநிதிமாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

கட்சி அறிவிப்புக்குப் பிறகு “தலைவர்” ரஜினியின் முதல் பட அறிவிப்பு இது.

இது அவரது ரசிகர்களிடையே எந்த மாதிரியான உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது?

அதற்கு முன் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சுருக் ஆக பார்த்துவிடுவோம்.

1990களின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரஜினியின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு ஏற்ற மாதிரி அவரது படங்களில் பஞ்ச் டயலாக்குகளும், பாடல்களும் இடம் பெற ஆரம்பித்தன.

ஆனால் 1996 சட்டமன்றத் தேர்தலில் வாய்ஸ் கொடுத்ததோடு சரி. அதன் பிறகு வந்த இரு தேர்தல்களிலும் வாய்ஸ் கொடுத்தார். மற்றபடி நேரடி அரசியலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் கடந்த (2017) ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரசிகர்களை அழைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட ரஜினி, கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தார். சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். ரஜினி ரசிகர் மன்றம், மக்கள் மன்றமாகமாறியது. அதற்கு உறுப்பினர் சேர்ப்பு பணியும் துவங்கப்பட்டது.

இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மாவட்டம் தோறும் ரசிகர் மன்ற நிலைமை குறித்து ஆய்வு செய்வது, சில மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது என்று ரஜினி டீம் பரபரப்பாக இயங்கத்துவங்கியது.

இந்த நிலைியல் தற்போது ரஜினி நடித்து ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருக்கும் காலா, அடுத்து வெளியாகத் தயாராக இருக்கும் 2.0 ஆகிய படங்களோடு திரைத்துறையை விட்டு விலகி முழுமையாக அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஏனென்றால் ரஜினியை அவர்கள் கட்சித் தலைவராக மட்டுமல்ல..  தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் பார்க்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. நடிப்பதாக இருந்த படம் ஒன்றும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதே போல தற்போது நடிகர் கமல்ஹாசனும், “தீவிர அரசியிலில் ஈடுபட்ட பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ரஜினி அடுத்தபடத்துக்கு தயாராகிவிட்டார்.

இதையடுத்து, “தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வது, அரசியல் பணிகளில் ஈடுபடுவது தடைபடுமோ” என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள், இந்த புதுப்பட அறிவிப்பு குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறியமுற்பட்டோம்.

நாம் பேசிய ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், “ தலைவர் ரஜினியைப் பொறுத்தவரை நடிப்பு அவருக்கு உயிர். அரசியல் என்பது நாங்களாக அவரை வற்புறுத்தி அழைத்து வந்ததுதான். ஆகவே நடிப்பு அரசியல் இரண்டையும் இரு கண்களாக அவர் பாவிக்கிறார். அவர் நடிப்பது என்பது எங்களது கட்சிக்கு பலம்தான். திரைப்படத்தின் மூலம் எளிதாக கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியுமே” என்றார்கள்.

 

 

ரஜினி-கணேசன்

தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசனிடம் பேசினோம். அவர், “புதிய பட அறிவிப்பால் கட்சிப்பணிக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படாது. தற்போது அவரது காலா படத்தினஅ பணி முழுமையாக முடிந்துவிட்டது. 2.0 படத்தின் பணி மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் அவரது அடுத்தப்பட அறிவிப்பு வந்திருக்கிறது. அது குறுகிய கால தயாரிப்பாகவே இருக்கும். அந்த படம் வரும் தீபாவளி அன்றுகூட வெளியாகலாம். அதாவது முன்பு தலைவரின் படங்கள் வருடத்துக்கு மூன்று வரும் அதுபோல மீண்டும் நடக்கலாம். ஆக 2018ல் படங்களை முடித்துவிட்டு, அடுத்த இரு வருடங்களில் அரசியல் பணியில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இது நல்ல விசயம்தான். தலைவரின் புதிய பட அறிவிப்பு உற்சாகம் அளிக்கிறது” என்றார்.

கலீல்

இதே கருத்தை திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கலீல் தெரிவிக்கிறார். அவர், “தலைவர் ரஜினி எப்போதுமே திட்டமிடுவதில் சிறந்தவர்.  அவரது புதிய பட அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலுக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில், தனது உழைப்பின் மூலம் தனது துறையில் பொருளீட்டுவது என்பது மிக நேர்மையான ஒன்று.  இதைத்தான் அவர் ரசிகர்களாகிய எங்களுக்கும் சொல்கிறார்.

புதிய படம் குறுகிய கால தயாரிப்பாகவே இருக்கும். ஆகவே அடுத்த இரண்டு வருடங்கள் அரசியலில் முழு கவனம் செலுத்துவார். தவிர இடையில் சில மாதங்கள் அவர் நடிப்பில் கவனம் செலுத்தினாலும், அவர் இட்ட பணிகளை செய்து முடிக்க நாங்கள் இருக்கிறோம்.

மற்ற பல அரசியல் தலைவர்கள் மறைமுகமாக பலவித தொழில்கள் செய்கிறார்கள். அதற்கு முழு நேரத்தையும் ஒதுக்குகிறார்கள். அது வெளியில் தெரிவதில்லை. ஆனால் எங்கள் தலைவர் நேர்மையாக வெளிபப்டையாக நடந்துகொள்கிறார் இது பெருமையே.

அவரது புதிய பட அறிவிப்பு எங்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது” என்றார் கலீல்.