டெல்லி: மத்திய அமைச்சரில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழகஅரசு புறக்கணித்துள்ளது. முன்னதாக, புதிய கல்விக்கொள்கையை தமிழகஅரசு ஏற்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில்,  மத்தியஅரசின் கூட்டத்தை தமிழகஅரசு புறக்கணித்து உள்ளது.

கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு மத்திய அரசின் சார்பில் 2019 ஆம் ஆண்டு  தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்டு, மோடி அரசு கடந்த  2020-ல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. இதற்கு மத்திய அமைச்சரவை, 2020 ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மாநில அரசின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கையின்படி, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு, 10+2 என்ற தற்போதைய பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் பாடமுறை மாற்றுதல் உள்ளிட்டவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சர்ச்சையானது. மாநில உரிமையை பறிக்கும் செயல் என குற்றம் சாட்டப்பட்டன. இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இதையடுத்து,  புதிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது.

2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல் செய்வது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு, மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

முன்னதாக இது குறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதினார். அதில்,  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு பதிலாக, மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், தமிழக அரசு எழுதிய இந்த கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் தெரிவிக்காத நிலையில்,   மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெறும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.   தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.