புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார்.
தர்மேந்திர பிரதானின் இந்த கருத்தை அடுத்து புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்தியை கட்டாய மொழியாக திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கூறிவருகின்றன.
அதேவேளையில், தமிழக பாஜக புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் இந்தி மொழிக்கு ஆதரவாகவும் மத்திய அரசு நிதியை நிறுத்துவதை நியாயப்படுத்தியும் இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் புதிய கல்வி கொள்கை குறித்து விமர்சித்தார்.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கல்வி கொள்கையை அரசியலாக்கவில்லை” என்றும் “அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்திற்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு அரசியல் செய்கிறது” என்றும் கூறினார்.
மேலும், “2022ம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை ஏற்ற பீகாரில் தற்போதைய கணக்கெடுப்பு படி பள்ளி வருகை 51 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது.
பீகாரில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதால் பள்ளிக்கு மாணவர்கள் வருகை 20 சதவீதம் குறைந்துள்ளது” என்றும் கூறினார்.
“சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை” என்று விமர்சித்த அப்பாவு “இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.