மயிலாடுதுறை: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க திமுக ஆட்சியில் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் (வடக்கு) மாவட்டங்களுக்கு உள்பட்ட 6 தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றார். பின்னர் அவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசியதாவதுத:

2017-18ம் ஆண்டில் பிளஸ் 2 நிறைவு செய்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என்ற புகார் தமிழகம் முழுவதும் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கடன் கோரினால், அதற்கு சொத்து அடமானம் கேட்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

அமையவுள்ள திமுக ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளின் வங்கிக் கடனுக்கு திமுக அரசே செக்யூரிட்டியாக இருக்கும். காமராஜரின் மதிய உணவு திட்டத்தை, சத்துணவுத் திட்டமாக அறிவித்து எம்ஜிஆர் செயல்படுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் நிறுத்தப்படும் என பலரும் தெரிவித்தனர். ஆனால், திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டது.

திமுக ஆட்சி அமையும்போது மக்கள் நலப் பணியாளர்களின் பிரச்னைகளுக்கு விமோசனம் கிடைக்கும். பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடம் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூம்புகார் மட்டுமல்ல, குமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கும் கூட அதே நிலைதான் உள்ளது. இப் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

திமுக ஆட்சியில் பூம்புகார் சிறப்பான சுற்றுலாத் தலமாக நிச்சயம் வளர்த்தெடுக்கப்படும். கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று ஸ்டாலின் பேசினார்.