சென்னை :
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் சில மாவட்டங்களில் கனம பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்கள் அடுத்த 4 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும், குறிப்பாக தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த காற்றதழுத்த தாழ்வு உருவாக்கம் காரணமாக, ‘அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி 22 செ.மீ, கூடலூர் 20 செ.மீ, மேல் கூடலூர், வால்பாறை, சோலையார் ஆகிய இடங்களில் தலா 13செ.மீ மழை பதிவானது. தேனி மாவட்டம் பெரியாரில் 12 செ.மீ. சின்னக்கல்லாறு, சின்கோனா, எமரால்டு மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் 11 செமீ மழை பெய்துள்ளது.தேவாலா மற்றும் கிளன்மோர்கனில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.