சென்னை:

டுத்த கல்வியாண்டு முதல் 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பாடத்திட்டங்கள் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சில வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது 3வது, 4வது, 5வது மற்றும் 8ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை  முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

2018-19-ம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு புதிய பாடப்புத்தகம் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதைத்தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

2020-21-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு உரிய முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க முடியும் என்றும், தற்சமயம் மேற்கண்ட வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, புத்தக வடிவமைப்பு பணியில் உள்ளது என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து முதல் பருவம் முடிந்து ஒரு மாதத்துக்குள் 2-ம் பருவ பாடங்களுக்கான குறுந்தகடுகளும் தயாரிக்க முடியும் என்றும், 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான சிறுபான்மை பாடங்களின் குறுந்தகட்டினை அடுத்த கல்வியாண்டில் (2020-2021) 3 பருவங்களுக்கும் மொத்தமாக வழங்க முடியும்.

2020-2021-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குரிய பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டிலேயே(2019-2020) நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்து பாடப்புத்தகங்களை 2019- 2020-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக் குனருக்கு அனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.