புதுடெல்லி:

வருவாயை பெருக்கி வரி செலுத்துவோரை அதிகப்படுத்துமாறு, வருமான வரித்துறையினரை புதிதாக பொறுப்பேற்றுள்ள நேரடி வரிவிதிப்பு மத்திய வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.


நேரடி வரி விதிப்பு மத்திய வாரிய தலைவராக பிரமோத் சந்திர மோடி  பொறுப்பேற்றுள்ளார். ஏற்கெனவே இப்பதவியில் இருந்த சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து,
இவர் பொறுப்பேற்றுள்ளார்.

பொறுப்பேற்ற பின்  செய்தியாளர்களிடம் கூறும்போது, ” சிறிய அளவிலான வரி செலுத்துவோரின் குறைகளை நிவர்த்தி செய்து, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வருமான வரித்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளேன்.

நாங்கள் உடனடியாக முக்கியத்துவம் தரப்போவது வருவாயை பெருக்குவதற்குத் தான். துன்புறுத்தல் ஏதுமின்றி அதிகாரிகள் இந்தப் பணியை செய்ய வேண்டும்.

2018-19-ம் ஆண்டில் நேரடி வரியாக ரூ.11.5 கோடி வருவாயை திரட்ட வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் வருமான வரித்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டு முடிய ஒரு மாதமே இருந்தாலும், எங்கள் இலக்கைவிட அதிக வருவாயை ஈட்டுவோம்.
இன்னும் சில ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் பெயர்,முகம் தெரியாத அளவுக்கு ரகசியம் காக்கப்படும்”  என்றார்.