டில்லி:

நாடு முழுவதும் எழும் நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில்  ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. நீர் நிலைகளை பாதுகாக்கவும், தண்ணீர் பிரச்சினை தீர்க்கவும்  ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த வாரம் மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத் இதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சனையை தீர்க்கும் 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா கொண்டு வரப்பட்டால், காவிரி மேலாண்மை ஆணையம் செயல் இழந்துவிடும் வாய்ப்பு உருவாகிவிடும் என நம்பப்படுகிறது.