சென்னை

ள்ளாட்சி அமைப்புக்களில் பதவியில் இருப்போர் ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு,மனுத் தாக்கல் செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.

தமிழக மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 26 அன்று தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்குமான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.    இந்த தேர்தலில் 12,838 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.   இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் நேற்று தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.   ஏற்கனவே மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி ஆகியவற்றில் வார்டு உறுப்பினர் அல்லது கிராமத் தலைவராகப் பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகே வேட்புமனு காத்தல் செய்ய வேண்டும்.

அவ்வாறு ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல் செய்வோர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், அவர் ஏற்கனவே உள்ள பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.   இவ்வாறு முறையாக ராஜினாமா செய்யாமல் போட்டியிடுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சிகளின் ஆய்வாளர்களான மாவட்ட ஆட்சித்தலைவருக்குப்  பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.