சென்னை:
அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேலும் 2 நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தென் கிழக்கு அரபி கடல் பகுதியில் நிலவும் ஓகி புயல் தீவிரமடைந்து லட்சத்தீவு பகுதியில் உள்ள அமிழ்தினி தீவிலிருந்து தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் லட்சத்தீவுகளை கடந்து செல்லும்.
மேலும், தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வுபகுதி நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இது வட திசை யில், வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கு நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பாபநாசத்தில் 45 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஏறத்தாழ 21 இடங்களில் மிக கன கனமழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம், குமரி கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அரபி கடல் பகுதி களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ராமநாதபுரம், நெல்லை மாவட்ட கடல் பகுதிகளிலும் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.