சென்னை

பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கி உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவாக டிவீட் வெளியிட்டுள்ளார்.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் தனது மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார்கள் வந்தன.   இதையொட்டி ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    இது குறித்து பள்ளியில் மாணவிகள் புகார் அளித்த போது அதை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.   இந்த நிகழ்வுக்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டரில்,

“சென்னையில் உள்ள மரியாதைக்குரிய பத்மா சேஷாத்ரி பள்ளியில் மூன்று கிளைகளில் 1000 மாணவர்கள் பணி புரிகின்றனர். 

இதை ஒரு ஞானி மற்றும் தியாகி ஆகிய பிராமணர்கள் நிர்வகிக்கின்றனர். 

இங்கு மாணவியிடம் ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதால் திமுக மற்றும் திகவினர் அவர்களை துன்புறுத்துகின்றனர். 

இந்த குண்டர்கள் தாக்குதலைத் தமிழக முதல்வர் நிறுத்தாவிட்டால் நான் பள்ளியின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்வேன்”

எனப் பதிந்துள்ளார்.

இந்த பதிவு நெட்டிசன்கள் இடையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பலரும் பிராமணப் பள்ளி என்பதால் பலாத்காரம் செய்தாலும் ஏற்க முடியுமா? எனவும் ஐந்து வருடங்களாக நடைபெறும் தொந்தரவு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகமும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பின்னூட்டம் இட்டுள்ளனர்.