சென்னை

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநரிடம் காவல்நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

சென்னையில் புகழ்பெற்று விளங்கும் பள்ளிகளில் பத்மா சேஷாத்ரி பள்ளியும் ஒன்றாகும்.  இந்த பள்ளி பிரபல திரைப்பட நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமியால் தொடங்கப்பட்டதாகும்.  தற்போது இந்த பள்ளியில் முதல்வராக கீதா கோவிந்தராஜன் பணியாற்றி வருகிறார்.   இந்த பள்ளியின் நிர்வாகத்தை இயக்குநர் ஷீலா ராஜேந்திரன் (மகேந்திரன் தம்பி மனைவி) கவனித்து வருகிறார்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு இதே பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.    ஆன்லைன் வகுப்புக்களின் போது இவர் வெறும் துண்டு மட்டும் அணிந்து பாடம் நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.   இந்த புகார்களின் அடிப்படையில் ராஜகோபால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஷீலா ராஜேந்திரன்

இந்நிலையில் நேற்று அசோக் நகர் காவல் நிலையத்துக்குப் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் இயக்குநர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர்.  அவர்களிடம் துணை ஆணையர் ஹரிகிரண் சுமார் ஒரு மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.  அதன்பிறகு காவல்நிலைய ஆய்வாளர் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளனர்.   மொத்தம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்துள்ளது.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் கடந்த 28 ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியராகப் பணி  புரிந்து வருகிறார். இந்த விசாரணையின் போது கடந்த காலத்தில் அவர் மீது ஏதும் புகார் வந்ததா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.   மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்த விவரங்களை கீதா, ஷீலா ஆகியோர் எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.