பத்திரிகையாளர் சுகுணா திவாகர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து…
“சுவாதி கொலை – ராம்குமார் கைது தொடர்பாக சாதியை மய்யப்படுத்தி எழுந்திருக்கும் விவாதங்கள், நமது சமூகத்தின் பொதுப்புத்தி மனநிலையின் நோய்க்கூறுகளைக் காட்டுகிறது. நான் இங்கு குறிப்பிடுவது வெறுமனே சாதிய மனநிலையின் நோய்க்கூறுகளை மட்டுமல்ல, சாதி எதிர்ப்பு என்று நம்பும் மனநிலையின் நோய்க்கூறுகளையும்தான்.
சுவாதியின் படுகொலை பேரளவிலான அதிர்ச்சியை எல்லாத் தரப்புகளிலும் ஏற்படுத்தியது. அப்போது இறந்துபோன சுவாதி என்ன சாதி என்று யாருக்கும் தெரியாது; அதுபற்றிய கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஆனால் சுவாதியைச் சாதியரீதியாக அடையாளப்படுத்தி, தங்கள் முஸ்லீம்விரோத மனப்பான்மையை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், சுவாதியின் சொந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்தான். அதற்கு எதிரான எதிர்ப்புகளும் கண்டனங்களும் போதிய அளவில் எழுப்பப்பட்டுள்ளன.
இப்போது சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தலித் என்ற செய்திகளின் அடிப்படையில் எழுந்துள்ள விவாதங்களோ இன்னும் மோசமானவை.
‘தலித்துகள் கொல்லப்படும்போது மட்டும் தலித் என்று குறிப்பிடுபவர்கள், கொலை செய்பவர் தலித்தாக இருக்கும்போது ஏன் குறிப்பிடுவதில்லை?’ என்று சாதியச் சக்திகள் அறிவுபூர்வமாகக் (?) கேள்வி எழுப்பி தலித் அமைப்புகள், பெரியாரிஸ்ட்கள், இடதுசாரிகள் வரை குற்றம்சாட்டுகின்றனர். (சிலபேர் கருணாநிதியைக் கூட கேள்வி கேட்டிருந்தனர்)

சுவாதி - ராம்குமார்
சுவாதி – ராம்குமார்

‘தலித் இளவரசன் தற்கொலை, தலித் சங்கர் கொலை, தலித் கோகுல்ராஜ் படுகொலை என்று குறிப்பிடுபவர்கள் தலித் ராம்குமார் கைது, கொலையாளி தலித் ராம்குமார் என்று ஏன் சொல்லவில்லை?’ என்கிறரீதியில் ஏராளமான நிலைத்தகவல்களைப் பார்த்தேன்.
தமிழ்நாட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான படுகொலைகள் நிகழ்கின்றன. இதில் இறப்பவர்களின் சாதிகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. அந்த நூற்றுக்கணக்கான படுகொலைகளில் தனிநபர் விரோதம் உள்ளிட்ட காரணங்களில் கொல்லப்படுபவர்களில் தலித்துகள் இருந்தாலும்கூட, அவர்களின் மரணம் ‘தலித்’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை.
ஆனால் ஒருவர் தலித்தாக இருக்கும் காரணத்தாலேயே கொலை செய்யப்பட்டால், தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டால் அந்த மரணங்களின் பின்னால் சாதியக் காரணங்கள் இருந்தால், இறந்தவரைத் ‘தலித்’ என்றுதான் அடையாளப்படுத்த வேண்டும். இளவரசன் தற்கொலை, சங்கர் படுகொலை, கோகுல்ராஜ் படுகொலை ஆகியவை தலித் என்கிற காரணத்திற்காக நிகழ்த்தப்பட்டவையே தவிர, தனிநபர் உறவுகள் சார்ந்தவை அல்ல.
ஆனால் இங்கே சுவாதி படுகொலை என்பது சாதி சார்ந்து நிகழ்த்தப்படவில்லை. இது ஓர் ஆண், தன் காதலை நிராகரித்ததால் பெண்ணைக் கொலை செய்த ஆணாதிக்க வன்முறை. வேண்டுமானால் ‘ஆணாதிக்க ராம்குமார்’ என்று குறிப்பிடலாமே தவிர, இங்கு சாதி அடையாளம் எங்கிருந்து வந்தது?