நெட்டிசன்:
டிகர் ரஜினி – லதா திருமணம் 1981ம் ஆண்டு திருப்பதியில் நடந்தபோது, ரசிகர்களை ரஜினி அடித்துவிட்டார் என்று பரபரப்பு செய்தி பரவியது.

லதா - ரஜினி
லதா – ரஜினி

அப்போது ஆனந்தவிகடன் இதழில், “திருமணத்தில் நடந்தது என்ன?”  என்பது தலைப்பில் ரஜினியின் பேட்டி வெளியானது.
அதில் ரஜினி, “நான் என்னமோ எல்லாத்தையும் மறைச்சு திருட்டுத் தனமா தாலி கட்டிட்டேன்னு நினைக்கிறாங்க. இல்லை. நடிக்க வந்துட்டா நாங்க பொது சொத்துதான். அதுக்காக எங்களுக்கு பிரைவசியே கிடையாதா?
“பத்திரிகை நண்பர்களை வீட்டுக்கு வரவழைச்சு தகவலை சொன்னேன். நானும் லதாவும் மாலை போட்டுகிட்டு முன்கூட்டியே எடுத்து வச்சிருந்த போட்டோவை கொடுத்தேன். நாளைக்கு திருப்பதில எங்க கல்யாணம் முடிஞ்சதும் இந்த படத்தை நீங்க போடுங்கனு சொன்னேன்.
“திருப்பதி கோயில்ல தாலி கட்ட நான் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி வச்சிருந்தேன். பத்திரிகை காரங்களும் ரசிகர்களும் கூட்டமா வந்துட்டா என் பேர் கெட்டுடும்னு பயந்தேன். அதனாலதான் திருப்பதிக்கு வராதீங்கனு கேட்டுகிட்டேன்.
“வந்தா?னு ஒரு நிருபர் கேட்டார். உதைப்பேன்னு சொன்னேன். உடனே இன்னொரு நிருபர், அப்டில்லாம் சொல்லாதீங்க; நாங்க அப்படியே பிரசுரிச்சா உங்களுக்கு அசிங்கம்னு சொன்னார். ஸாரி சொன்னேன்.
“நான் அத்தனை சொல்லியும் ரெண்டு மூணு பேர் அங்க வந்துட்டாங்க. நான் பிளான் பண்ணினதை மீறி எது நடந்தாலும் என்னால தாங்கிக்க முடியாது. ஒருத்தர் கழுத்துல கேமரா வேற தொங்கிட்டு இருந்துது. எனக்கு கோபம் வந்துருச்சு. கண்ட்ரோல் பண்ண முடியல. அடிக்க போயிட்டேன். நல்லவேளையா சிலர் என்னை தடுத்து நிறுத்தினாங்க.
போட்டோகிராபர் என்னை துரத்தி்கிட்டு திருச்சானூர் வரைக்கும் வந்துட்டார். ஒரே ஒரு போட்டொ எடுத்துக்குறேன்னார். நான் அனுமதிக்கல. இதுதான் உண்மைல நடந்துது. ஆனா ரசிகர்களை நான் அடிக்க போயிட்டதா தப்பா நியூஸ் போட்டுட்டாங்க..” என்று தெரிவித்திருந்தார்.
அப்போது ரஜினியின் திருமணத்துக்கு ( செய்திக்காக) சென்ற பத்திரிகையாளர்களில் ஒருவர் “தினமலர்” நாளிதழில் பணிபுரிந்த கதிர்வேள் (Kathir Vel )  அவர்கள் அன்று நடந்ததை,  தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அவரது பதிவில் இருந்து..
“ரஜினியின் எச்சரிக்கையை மீறி (எச்சரிக்கை காரணமாக என்பது இன்னும் சரி) திருமணத்தை கவர் செய்ய திருப்பதிக்கு செய்தியாளர்களை அனுப்பிய ஒரே தமிழக பத்திரிகை தினமலர். இருவர் சென்றோம். அந்த இன்னொருவர் பிரஸ் போட்டோகிராபர்களின் பிதாமகனாக மதிக்கப்படும் பெரியவர் கே. விஸ்வநாதன்.
திருப்பதியிலும் பின்னர் திருச்சானூரிலும் நடந்த நிகழ்ச்சிகள் முற்றிலும் தவிர்த்திருக்கக் கூடியவை.
ஆனால் அன்றைய ரஜினி முற்றிலும் வேறானவர். பாதுகாப்புக்கென அவர் அழைத்துச் சென்றிருந்த ஸ்டண்ட் நடிகர்களும், அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஒய்.ஜி.மகேந்திரனும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது அடுத்த இரு நாட்களில் பத்திரிகைகளில் விரிவாகவே பிரசுரமானது.
ரஜினி
ரஜினி

திருமணத்துக்கு பிறகு ஓராண்டுக்கு மேலாக தினமலருக்கும் ரஜினிக்கும் ஆகவில்லை. வீட்டுக்கு வெளியே ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் தொடர்ந்து கவனித்த தினமலர், ரஜினியால் ஜீரணிக்க முடியாத, ஆனால் சுவாரசியமான செய்திகளை தவறாமல் பிரசுரித்து வந்தது. சிறு கிராமங்களில்கூட அதற்கு நிருபர்கள் இருந்ததால், ஒரு கட்டத்தில் அவுட்டோர் ஷூட்டிங்கையே ரஜினி தவிர்க்க நேர்ந்தது.
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்தானே. தினமலர் – ரஜினி கண்ணாமூச்சி ஆட்டமும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. மிரட்டலுக்கு அடங்க மறுக்கும் தினமலருக்கு மெல்ல மெல்ல நெருக்கமானார் ரஜினி.
ஆனாலும் திரை உலகுடன் ஆனந்த விகடனுக்கு இருக்கும் நெருக்கத்துக்கு அது என்றும் ஈடாகாது.”