மதுரை: நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, புகார் வந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் என்பது தவறு என்று கூறியதுடன், பாதிக்கப்பட்டோர் பணத்தை திரும்ப பெறுவதையும் போலீசார் உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் உயர்நீதிமன்றம்மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்கள் நெல்லை, மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ளன. இந்த சொத்துக்களை வழக்கில் இணைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு வைப்புத் தொகையாளர்களின் நலன் பாதுகாப்பு (நிதி நிறுவனங்கள்) சட்டம், இதுபோன்ற பிரச்னைகளை தடுக்கவே கொண்டு வரப்பட்டது. நிதி நிறுவனங்கள் மோசடி செய்தால் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் என விசாரணை அமைப்புகள் நினைப்பது தவறு.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இதுபோன்ற பிரச்னைகள் தொடர்பாக புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் வட்டி வழங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியும் போது, அந்த நிறுவனங்களின் விபரங்கள், புகார்கள் எழுந்துள்ளனவா என்பது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்.
இதுபோன்ற விவகாரங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது தொகையை திரும்பப் பெறுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் புள்ளிவிவரங்கள் 10% தொகை கூட பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்றே கூறுகிறது. அவர்கள் மீண்டும் தங்களது பணத்தை பெறுவதை அரசு அதிக அக்கறையுடன் உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரர் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் இந்த வழக்கோடு தொடர்புடையவையா, இல்லையா என்பதை கூட உறுதி செய்யாமல் இந்த வழக்கு உள்நோக்கோடு தொடர்புடையது என கூறுவது நீதிமன்றத்திற்கு திருப்தி அளிப்பதாக இல்லை.
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை. மனுதாரர் குறிப்பிடும் சொத்துக்கள் இந்த வழக்கோடு தொடர்புடையதுஎனில் அவற்றை இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.